தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக, கட்சியின் கொறடா உத்தரவை மீறி நம்பிக்கைப் வாக்கெடுப்பில் வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தரப்பு நிர்வாகிகள் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் போது, அதிமுக தரப்பில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ‘கொறடா’ உத்ததரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விதிமீறலாகும் என்று இபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட அந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் இன்று சட்டப்பேரவைச் செயலாளரை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் தற்போது அதிமுக கட்சி எஸ்.பி வேலுமணி அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டு தரப்பாக பிரிந்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை எடுப்பதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.