ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. அதிமுகவில் இரு பிரிவாக இருந்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய தலைமையிலான அணியினர் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்த நிலையில், தொடர்ந்து அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆன செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என  தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா வழியில் கழகத்தின் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையேற்று இன்று இந்த தேர்தல் களத்திலே முதல் இடைத்தேர்தலை நாம் சந்திக்கிறோம். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் தேர்தல் களத்தினுடைய முடிவுகள் எப்படி வரப்போகிறது என்று. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடு மட்டுமல்ல, உலக அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த தேர்தலை பொருத்தவரையிலும் இது ஒரு பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்குகிற தேர்தலாக இது அமையும்.

அதுவும் குறிப்பாக மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் நடைபெறுகிற இந்த களம் திண்டுக்கல் தேர்தலில் புரட்சித்தலைவர் எப்படி ஒரு திருப்புமுனையை உருவாக்கி காட்டினாரோ, அதேபோல கிழக்கு தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு தான் மக்களின் மனநிலை இருக்கிறது மக்கள் நிலைகளை நாங்கள் கலந்து பேசுகிறபோதும் சரி, களத்திலே சென்று கழக பணியாற்றக் கூடிய அத்தனை பேரும் சொல்லுகிற கருத்துக்கள் ஒன்றாக இருக்கிறது. இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி காட்டும். இதுதான் தமிழகத்திற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனித்தே நாம் இன்று களத்தில் நின்று இருக்கிறோம்.

அது மட்டுமல்ல நமது கூட்டணியை பொறுத்தவரையிலும் 2-3 நாட்களுக்குள் யார்யார் கூட்டணியில் அமையப் போறார்கள் என்பதை பொதுச் செயலாளர் அவர்கள் அறிவிப்பார்கள். இன்று எல்லோரும் இந்த அணி இப்படி பிரிந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். 98.5% நாம் ஒரே அணியில் இருக்கிறோம். ஒருங்கிணைந்து அதுவும் மாண்புமிகு எடப்பாடி அவர்கள் தலைமையில் இந்த வெற்றி என்பது  ஒரு சரித்திரம் படைக்கின்ற வெற்றியாக கிழக்கு தொகுதி அமையும் என்பதை எல்லோரின் சார்பாகவும், மக்களுடைய கருத்துக்களாகவும் நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது பாஜக..