தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழ்நாடு குறித்து பேசியிருந்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குடியரசு தினம் அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதற்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம் பற்றி திமுக-வின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது, ஆக்கப்பூர்வமான அரசின் செயல்பாடுகள் தேக்க நிலை அடையவேண்டும் என்பதற்கு ஆளுநர் இடம்கொடுக்கவில்லை. தேநீர் விருந்துக்கான அழைப்பிதழில் “தமிழ்நாடு” எனும் அரசமைப்பு சட்டரீதியான பெயரை பதிவு செய்ததுடன், முதலமைச்சருக்கு அழைப்பிதழை முறைப்படி அனுப்பினார். முதல்வரும் மற்றெல்லாப் பிரச்சினைகளிலும் கையாளும் பெருந்தன்மை உடன் கூடிய மென்மையான அணுகுமுறையையே குடியரசு நாளை ஒட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார்.

நம்முடைய முதல்வர், மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்குத் தயாராக இருப்பவர் அல்ல. எப்போதும் அவரது கண்களுக்கு தெரிவதெல்லாம் சீரான ஆட்சி நிர்வாகம் மற்றும் வெகு மக்களுக்கு நாளும் ஆற்ற வேண்டிய நற்பணி தான்” என  குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் வாயிலாக முதல்வர்- ஆளுநர் மோதல் போக்கு மறைந்து, அரசியல் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.