தேர்தல் களத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அது நிரந்தரமானது அல்ல என்றும், கழகத்தின் எதிர்காலத்தைத் திட்டமிட நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான அவகாசமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை கட்சியினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ள இந்த இயக்கம், தனது வலுவான அமைப்பு முறை காரணமாகவே 75 ஆண்டுகளைக் கடந்தும் உறுதியுடன் நிற்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தலைவர் கலைஞரின் “இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், தி.மு.க.வின் வாழ்வு முடியாது” என்ற வரிகளை நினைவுபடுத்திய அவர், தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு சுய பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தனிமனிதர்களின் தவறுகளால் 75 ஆண்டு காலக் கழகம் பாதிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், கட்சியை மறுசீரமைக்கக் கடுமையான மற்றும் சிலருக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றார். கசப்பு மருந்தைப் போன்ற இந்த மாற்றங்கள் அடுத்த நூறாண்டுக்குக் கழகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் என்று அவர் உறுதியளித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கள ஆய்வுக் குழுவின் மூலமும், இணையதளம் வாயிலாகவும் பெறப்பட்ட பல்லாயிரக்கணக்கான கருத்துகளின் அடிப்படையில் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
இனிவரும் காலங்களில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வயது வரம்பும் பதவிக்காலமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், புதுமுகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கையை நேர்மையான முறையில் தொடங்கி, அனைத்து மட்டங்களிலும் முறையான உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எதிர்க்கட்சிகளைப் பார்த்து மலரும் முகம் சொந்தக் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வதில்லை என்ற நிலையை மாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக் கொண்ட அவர், ஒரு மாவட்ட செயலாளரை அல்லது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டும் நம்பி கட்சியை வளர்க்க முடியாது என்றார். ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகியாகச் செயல்படும் போதுதான் இயக்கம் வாழும் என்று கூறிய அவர், “போர் அடிக்கிறது என அரசியலுக்கு வரவில்லை; போராடத்தான் வந்தோம்” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும் கட்சியின் கட்சி மாவட்டங்களின் நிர்வாக எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 110-ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இளைஞர்களுக்குக் கட்சியில் கூடுதல் வாய்ப்பளிக்கும் வகையில், கிளைக்கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டச் செயலாளர்களாகப் பொறுப்பு வகிப்பவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கிலும், அமைப்பை எளிமைப்படுத்தும் வகையிலும் ‘மாநகரச் செயலாளர்’ என்ற பதவியே இனி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டு அப்பதவி நீக்கப்பட்டுள்ளது.
