சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டும் முயற்சி மேற்கொண்டால், அதனை அணு ஆயுதத்தால் தகர்த்து விடும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். அமெரிக்காவில் வைத்து அவர் வெளியிட்ட இந்தக் கருத்து, சர்வதேசளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூர தாக்குதலை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது சில ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. பதிலளிக்க பாகிஸ்தானும், இந்தியா மீது நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியா, பாகிஸ்தானுடன் உள்ள சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்த முடிவை எடுத்தது. இதனால், பாகிஸ்தானுக்கு நீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இந்தியா தற்போது சிந்து நதியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால், பாகிஸ்தான் அதனை அணு ஆயுதம் கொண்டு அழிக்கும். பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சி அடைகிறோம் என்று யாரும் நினைக்கவே கூடாது. அவ்வாறு நினைத்தால், பாதி உலகத்தையும் சேர்த்து வீழ்த்துவோம்” என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவரது இந்த கூற்று, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தானின் இந்த வகையான அணு ஆயுத மிரட்டல்கள் புதிதல்ல என தெரிவித்துள்ளது. “பாகிஸ்தான் தொடர்ந்து பொறுப்பில்லாத வகையில் அச்சுறுத்தும் பேச்சுகளை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் நம்பகத்தன்மை குறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
பயங்கரவாதக் குழுக்களுடன் பாகிஸ்தான் ராணுவம் இணைந்து செயல்படுகிறது என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இந்தியா இதுபோன்ற எந்த மிரட்டலுக்கும் ஒருபோதும் அடிபணியாது. தேசப் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
