தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருப்பினும் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை இரு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இரு வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு  நாளை ‌ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் நாளை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.