ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சதம் கடந்து ஆடி வருகிறார்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று காலை 9:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் கவாஜா தலா 1 ரன் எடுத்து, ஷமி மற்றும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் லாபுசேன் (49) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (37) சிறப்பாக விளையாடி சிறிது நேரம் கை கோர்த்து ஆடிய நிலையில், ஜடேஜா சுழலில் வீழ்ந்தனர்..

பின் ஹேண்ட்ஸ்கோம்ப் (31) மற்றும் அலெக்ஸ் கேரி (36) இருவரும் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் கம்மின்ஸ் (6) உட்பட  வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாகவும், கேஎல் ராகுல் நிதானமாகவும் விளையாடினர். பின் ராகுல் 20 (71) ரன்னில் டாட் மர்பி சுழலில் அவுட் ஆனார். இருப்பினும் ரோஹித் சர்மா அரைசதம் கடந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.  ரோஹித் சர்மா 56 ரன்களுடனும் , அஸ்வின் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா 24 ஓவரில் 77/1 என இருக்கிறது. இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ரோகித் சர்மாவும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து இன்று ஆடிவந்த நிலையில், அஸ்வின் 23 ரன்னில் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து  வந்த புஜாரா 7, விராட் கோலி 12,  சூர்யகுமார் யாதவ் 8 என மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆனாலும் மறுமனையில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் தனி ஒருவராக சிறப்பாக ஆடி சதம் விளாசினார். ரோஹித்  171 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 9வது சதத்தை ரோகித் சர்மா பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை கடந்து இந்தியா தற்போது முன்னிலையில் ஆடி வருகிறது. தற்போது ஜடேஜாவும் (12), ரோஹித் சர்மாவும் (103) ஆடி வருகின்றனர். இந்திய அணி 67 ஓவரில் 5 விக்கெட் இழந்து 189 ரன்களுடன் ஆடி வருகிறது.. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டாட் மர்பி 4 விக்கெட்டுகளும், லியோன் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்.