
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்குப் பின்னர் கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. மேலும் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியூர் செல்லும் நிலைமை தான் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது நாம் தமிழ்நாட்டில்தான் உள்ளோமா அல்லது வேறு எங்கேயாவது உள்ளோமா என தெரியவில்லை.
மேலும் கொங்கு பகுதியில் தோட்டத்துப் பகுதியில் யாரும் தங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. விடுமுறையை கொண்டாட வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இது போன்ற சம்பவங்களில் தமிழக முதல்வர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக அரசு எப்பொழுதுமே யார் காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்கிறார்களோ அந்த புகார் அளிப்பவர்களையே பிடித்து உள்ளே போடுவது தான் வாடிக்கையாக வைத்துள்ளது. அதே செயல் தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்தது. அதிமுக, பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டுகள் பாதிக்கப்படாது என கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், அதிமுக பாஜக கூட்டணி வரவேற்று பேசிய அதிமுக நிர்வாகியை ஐக்கிய ஜமாத் அமைப்பு நீக்கி உள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஜமாத் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தன்னால் பேச முடியாது எனவும், பொதுமக்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிப்பர் எனவும் தெரிவித்தார்.