டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டாலின் மகள் திருமணம், நாட்டளவில் கவனத்தை ஈர்த்து சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்தத் திருமண விழாவில், முன்னணி அரசியல் தலைவர்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக ஈடுபட்ட காணொளிகள் வெகுவாகப் பரவி வருகின்றன.

திருமண கொண்டாட்டத்தின் ஒத்திகையின்போது, பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கணா ரணாவத், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் நடனம் ஆடும் புகைப்படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த மூவரும் மேடையில் நடனம் ஆடிய முழு காணொளிகளும் வெளியாகி உள்ளன.

 

இந்த பரபரப்பிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, நவீன் ஜிண்டால் தனது சகோதரர்களுடன் ஒரு பிரபலமான பாலிவுட் பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடும் காணொளியும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிகழ்வை நடத்திய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியான நவீன் ஜிண்டால், 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து, 2024இல் பாஜகவுக்கு மாறியவர்.

மணமகள் யசஸ்வினி ஜிண்டால், தொழிலதிபர் சந்தீப் சோமானி மற்றும் சுமிதா சோமானி ஆகியோரின் மகன் சஷ்வத் சோமானியை மணந்தார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலகலப்பாகக் கொண்டாடிய இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்ப்பது மிகவும் புத்துணர்ச்சி அளிப்பதாக இருப்பதாகப் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.