குஜராத்தின் சூரத் நகரில், ஜவுளிக் கடை உரிமையாளர் சந்தீப் கவுட், தனது மனைவி வர்ஷாவின் சகோதரியான மம்தா காஷ்யப்பை இரண்டாவது மனைவியாக்கும் விருப்பத்தில் இருந்தார். இதை அவரது குடும்பம் பலமுறை கூறியும், மம்தாவின் சகோதரர் நிஸ்சய் காஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

டிசம்பரில் நிஸ்சய்க்கு நடைபெறவிருந்த திருமணத்திற்காக, பிரயாக்ராஜ் நகரிலிருந்து நிஸ்சய், சகோதரி மம்தா மற்றும் தாயார் சகுந்தலா தேவி ஆகியோர் சூரத் வந்தனர்.

திருமணத்திற்கான துணிகளை வாங்குவதற்காக வந்த அவர்களை சந்தித்த சந்தீப், மீண்டும் இதே விஷயத்தை எழுப்பி தகராறு மூட்டினார். இந்த வாக்குவாதம் திடீரென கொடூரமான தாக்குதலாக மாறியது.

கோபத்தில் கத்தியை எடுத்த சந்தீப், நிஸ்சய் மற்றும் மம்தாவை குத்தி கொன்றார், இதனால் இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த சகுந்தலா தேவியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

உத்னா காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, சந்தீப்பை கைது செய்தனர். இதில் ஏற்கனவே, சந்தீப் மற்றும் அவரது சகோதரர் ராகுல் கவுட், வர்ஷா மற்றும் அவரது சகோதரியான லட்டுவை முறையே திருமணம் செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம், குடும்ப உறவுகளில் ஏற்படும் மோதல்களின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.