கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) எம்.எல்.ஏ. வாழூர் சோமன் (72), நேற்று (ஆகஸ்ட் 21, 2025) திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்
. உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வாழூர் சோமனின் திடீர் மறைவு, இடுக்கி மாவட்ட மக்களையும், குறிப்பாக பீர்மேடு தொகுதியின் தோட்டத் தொழிலாளர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1972ஆம் ஆண்டு முதல் பீர்மேடு பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய சோமன், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (AITUC) மாநில துணைத் தலைவராகவும், பீர்மேடு தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிரியாக் தாமஸை 1,835 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவு கேரள அரசியல் மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.
