திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியாக மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து (தடம் எண் 140) இன்று காலை மீஞ்சூர் சென்று பொன்னேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு முதல் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்ததால், அப்பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில், காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதியது.

விபத்தினால் பேருந்தின் ஒரு பக்க சக்கரம் கீழே இறங்கி, பேருந்து அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் பதறியடித்து பேருந்திலிருந்து கீழே இறங்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பொன்னேரி பணிமனை அதிகாரிகளும், தொங்கிய நிலையில் உள்ள பேருந்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கர பிரேக் பிடிக்காமல் போனதால் விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.