சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது அந்த மர்ம நபர் ராஜ்குமாரிடம் “நீங்கள் போதை பொருள் கடத்தியதாக புகார் வந்துள்ளது. உடனடியாக டெல்லியில் ஆஜராக வேண்டும். ஆஜராகும் வரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.

அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் செய்வதறியாமல் திணறினார். அப்போது அந்த மர்ம நபர்” நீங்கள் போதை பொருள் கடத்த வில்லை என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும், நான் சொன்ன வங்கிக் கணத்திற்கு அனுப்புங்கள், இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மிரட்டினார். அதனை கேட்டு ராஜ்குமார் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.16 லட்சத்து 50,000 பணத்தை அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

அதன்பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் தான் ஏமாந்து போனதை ராஜ்குமார் உணர்ந்தார். பின்னர் இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் மோசடியில் மர்ம கும்பலுக்கு உதவியாக இருந்தது ஆனந்தகுமார் என்பது தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.