
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை நடந்து வருவதாக புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2 பேராசிரியர்களால் பாதிக்கப்பட்டு வந்ததால் முதலமைச்சர், மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் கல்லூரி முதல்வருக்கு மனு ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மனுவில் கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர்கள் 2 பேர் மாணவிகளின் மொபைல் நம்பரை வாங்கி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதோடு இரட்டை அர்த்தத்தில் பேசி துன்புறுத்துகிறார்கள் அது மட்டுமில்லாமல் கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் பயிற்சி வகுப்பு ஒன்றை அமைத்து அங்கு பாலியல் துன்புறுத்தல் செய்து வருகிறார்கள்.
இதனால் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்களை காப்பாற்றுவதற்காக அந்த 2 பேராசிரியர்களையும் இட மாறுதல் செய்யுங்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக கல்லூரி முதல்வர் கூறும் போது “இறுதி ஆண்டு மாணவிகளின் பெயரில் இந்த புகார் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை பற்றி கல்லூரியில் பயின்று வரும் 90 மாணவிகளிடம் விசாரித்தபோது, எந்தவொரு துன்புறுத்தலும் தங்களுக்கு நடக்கவில்லை என்று தெரிவித்தனர். தற்போது மீதமுள்ள மாணவிகளிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு தவறு ஏதேனும் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.