
சிவகங்கையில் உள்ள ஒரு பகுதியில் பாலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று பாலுச்சாமி தனது தோட்டத்திற்கு நீர் பாசுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவர் கிணற்றில் சென்று பார்த்தபோது, அங்குள்ள படியில் சிறுமி ஒருவர் உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாலுச்சாமி உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புதுறையினரின் உதவியோடு சிறுமியின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களையும் சேமித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர், அக்கம் பக்கத்தில் சிறுமிகள் யாராவது மாயமாக உள்ளார்களா? என்று முதல் கட்ட விசாரணை நடத்தியதில் யாரும் இல்லை என்ற தகவல் கிடைத்தது. எனவே வெளி மாவட்டத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்த ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? அல்லது வேறு பிரச்சனையில் பழிவாங்கும் நோக்கத்தில் சிறுமியை கொன்றார்களா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு இடையில் காட்டாணிகுளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணுடன், தனது வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்து வந்த உருவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.