ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு வரலாற்று சாதனை! ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், முதல்முறையாக மகளிர் அணி கோப்பையை வென்ற அபாரமான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் வெற்றி பல வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். நமது நாரி சக்தி பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விதம் அபாரமானது” என தெரிவித்துள்ளார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

இளம் அன்மோல் கர்பின் சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியப் பெண்கள் இந்தப் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற தாய்லாந்தை இந்தியா தோற்கடித்தது :

பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி, அனைத்து பாதகமான சூழ்நிலைகளையும் மீறி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தது மற்றும் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற தாய்லாந்தை வீழ்த்தியது. ஏப்ரல் 28 முதல் மே 5 வரை சீனாவின் செங்டுவில் நடைபெறும் உபெர் கோப்பைக்கான அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் அணி சாம்பியன்ஷிப்பில் இந்தியப் பெண்களுக்கான முதல் பெரிய பட்டம் இதுவாகும்.

போட்டி இப்படி இருந்தது :

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் ஒற்றையர் பிரிவில் உலகின் 17வது இடத்தில் உள்ள சுபனிடா கேட்டெதோங்கை 21-12, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவை  1-0 என முன்னிலை பெறசெய்தார். இதனையடுத்து உலக தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள திரிசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்ததுடன், உலகின் 10-ம் நிலை ஜோடியான ஜோங்கோல்பன் கிடிதரகுல்-ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியா முன்னிலை பெற்றது.

தொடர்ந்து சனிக்கிழமையன்று ஜப்பானின் முன்னாள் உலக சாம்பியனான நோஜோமி ஒகுஹாராவுக்கு எதிரான அவரது அற்புதமான வெற்றிக்குப் பிறகு அஷ்மிதா சாலிஹா மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டன, ஆனால் அவர் 2வது ஒற்றையர் பிரிவில் 11-21 14-21 என்ற கணக்கில் உலகின் 18 ஆம் நிலை புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோற்றார். இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் மூத்த தேசிய சாம்பியனான பிரியா கொன்செங்பாம் ஜோடி  உலகின் 13வது இடத்தில் உள்ள பென்யப்பா அம்சார்ட் மற்றும் நுனடகர்ன் அம்சார்ட் ஜோடியிடம் 11-21, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைய ஆட்டம் 2-2 என சமன்ஆனது. இந்நிலையில் இன்று இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு அன்மோல் கபர் மீது வந்தது, அவர் 21-14 21-9 என்ற கணக்கில் உலகின் 45 ஆம் நிலை போர்ன்பிச்சா சோய்கிவாங்கை தோற்கடித்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.