பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொமிலா விக்டோரியன்ஸ் மைதானத்தில் நடந்த பயிற்சியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பக்கத்து வலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த லிட்டன் தாஸ் அடித்த ஷாட் முஸ்தாபிசூரின் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விக்டோரியன்ஸ் அணி, சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் முஸ்தாபிசூருக்கு களத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது :

பின்னர் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் உள் இரத்தப்போக்கு இல்லை என்பது தெரியவந்தது. குழு பிசியோ எஸ்.எம். ஜாஹிதுல் இஸ்லாம் சஜல் ஒரு ஊடக வெளியீட்டில் கூறியதாவது, பயிற்சியின் போது ஒரு பந்து நேரடியாக முஸ்தாபிசுர் ரஹ்மானின் இடது பாரிட்டல் பகுதியில் (தலை) தாக்கியது. அவரது பாரிட்டல் பகுதியில் ஒரு வெளிப்புற காயம் இருந்தது. முஸ்தாபிஸூருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தப்போக்கை கட்டுப்படுத்த சுருக்கக் கட்டுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் உடனடியாக அவரை இம்பீரியல் மருத்துவமனைக்கு மாற்றினோம். CT ஸ்கேன் செய்த பிறகு அவருக்கு வெளிப்புற காயம் மட்டுமே இருந்தது என்று நாங்கள் திருப்தி அடைந்தோம். மண்டைக்குள் இரத்தப்போக்கு இல்லை. காயத்தில் தையல் போடுவதற்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, அவருக்கு காயத்தில் தையல் போட்டுள்ளது. தற்போது கொமிலா விக்டோரியன்ஸ் டீம் பிசியோவால் அவர் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்றார்.

கொமிலாவின் மீடியா மேலாளர் சோஹானுஸ்ஸாமான் கான் ESPNcricinfo இடம், முஸ்தாபிஸூர் நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவித்தார். “நாங்கள் அவரை மருத்துவமனைக்கு தயார்படுத்தி கொண்டுசென்ற போது, ​​​​அவர் சாதாரணமாக செயல்படுவது போல் தோன்றியது,” என்று அவர் கூறினார்.

லீக்கில் முஸ்தாபிசூரின் ஆட்டம் :

தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் 9 போட்டிகளில், கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக ஆடிவரும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இதுவரை 23.91 சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிர்பூரில் நடந்த எட்டாவது போட்டியில் பார்ச்சூன் பாரிஷாலுக்கு எதிராக 3/32 மற்றும் லீக் தொடக்க ஆட்டத்தில் டர்டன்ட் டாக்காவுக்கு எதிராக 2/31 எடுத்தார். பிப்ரவரி 14 அன்று சிட்டகாங்கில் நடந்த கொமிலா விக்டோரியன்ஸின் கடைசி போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 1/28 எடுத்தார். இந்தப் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

நடந்து முடிந்த ஐபிஎல் 2024க்கான மினி ஏலத்தில் முஸ்தபிசுர் ரகுமானை ரூ.2 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.