உலக கோப்பையில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி..

உலக கோப்பையில் இன்று 14 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் லக்னோ ஸ்டேடியத்தில் மோதியது. போட்டி சரியாக 2:00 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக நிஷாங்கா மற்றும் குசல் பெரேரா இருவரும் களமிறங்கி மிகச் சிறப்பாக  இன்னிங்சை தொடங்கினர்.. இருவரும் விக்கெட்டை இழக்காமல் 17.4 ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி சிரமப்பட்ட நிலையில், கம்மின்ஸ் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.. கம்மின்ஸ் வீசிய 21.4வது ஓவரில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நிஷாங்கா 61 ரன்களில் டேவிட் வார்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் குசல் பெரேரா சிறப்பாக ஆடிவந்த நிலையில், அவரும் கம்மின்ஸின் 27 ஆவது ஓவரில் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். குசல் பெரேரா 82 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் (2 ரன்கள்) ஆடம் ஜம்பாவின் ஓவரில் அடிக்க முயன்று டேவிட் வார்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து சமரவிக்ரம 8 ரன்னில் ஜாம்பாவின் சுழலில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். அதன் பின் சரித் அசலங்கா மற்றும் தனஞ்செய டி சில்வா இருவரும் ஆடிவந்த நிலையில், இலங்கை அணி 32.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.. தனஞ்சய டி சில்வா 7, துனித் வெல்லாலகே 2, கருணரத்னே 2, தீக்ஷனா 0, லகிரு குமாரா 4, அசலங்கா 25 என அனைவரும் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினர். இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் தொடக்கம் மிகச் சிறப்பாக இருந்த நிலையில், 300 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்து அசத்தியது.

இலங்கை அணி கடைசி 52 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் செயல்படாத ஜாம்பா இந்த போட்டியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் (11 ரன்கள்) அதிரடியாக சிக்ஸருடன் தொடங்கிய நிலையில், மதுஷன்கா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.. தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் ஸ்மித் டக் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 4 ஓவரில் 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது.

அதன்பின் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்னஸ் லபுஷேன் இருவரும் கைகோர்த்து சிறப்பாக ஆடினர். மார்ஷ் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்த நிலையில், 15 வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பின் ஜோஸ் இங்கிலீஷ் – லபுஷேன் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இதில் இங்கிலிஸ்  சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். லபுஷேன் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 40 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல்லும், இங்கிலிஸும் சேர்ந்து ஆடிய நிலையில், மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். அதன்பின் இங்கிலிஸ் 59 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆன நிலையில், ஸ்டாய்னிஸ் – மேக்ஸ்வெல் சேர்ந்து அணியை வெற்றிபெற வைத்தனர்.. ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் 20 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி தனது 3வது போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.