ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உலக கோப்பையில் இன்று 14 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் லக்னோ ஸ்டேடியத்தில் மோதியது. போட்டி சரியாக 2:00 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக நிஷாங்கா மற்றும் குசல் பெரேரா இருவரும் களமிறங்கி மிகச் சிறப்பாக  இன்னிங்சை தொடங்கினர்.. இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல் 17.4 ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி சிரமப்பட்ட நிலையில், கம்மின்ஸ் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.. கம்மின்ஸ் வீசிய 21.4வது ஓவரில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நிஷாங்கா 61 ரன்களில் டேவிட் வார்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் குசல் பெரேரா சிறப்பாக ஆடிவந்த நிலையில், அவரும் கம்மின்ஸின் 27 ஆவது ஓவரில் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். குசல் பெரேரா 82 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் (2 ரன்கள்) ஆடம் ஜம்பாவின் ஓவரில் அடிக்க முயன்று டேவிட் வார்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து சமரவிக்ரம 8 ரன்னில் ஜாம்பாவின் சுழலில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். அதன் பின் சரித் அசலங்கா மற்றும் தனஞ்செய டி சில்வா இருவரும் ஆடிவந்த நிலையில், இலங்கை அணி 32.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.. தனஞ்சய டி சில்வா 7, துணித் வெல்லலகே 2 கருணரத்னே 2, தீக்ஷனா 0, லகிரு குமாரா 4, அசலங்கா 25 என அனைவரும் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினர். இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் தொடக்கம் மிகச் சிறப்பாக இருந்த நிலையில், 300 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்து அசத்தியது.

இலங்கை அணி கடைசி 52 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் செயல்படாத ஜாம்பா இந்த போட்டியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து  ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் வார்னர் களமிறங்கி ஆடி வருகின்றனர்.