தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் 30வது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 சதங்கள் அடித்து டான் பிராட்மேனை முந்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்..

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது தென்னாபிரிக்கா அணி. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தென்னாபிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். இதில் வார்னர் 10 ரன்களில் அவுட் ஆனார்.. அதனைத் தொடர்ந்து மார்னஸ் லாபுசாக்னேவும், கவாஜாவும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். இதையடுத்து லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த போது, அன்ரிச் நார்ட்ஜே வீசிய 47வது ஓவரில் அவுட் ஆனார். அதன்பின் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயேநி றுத்தப்பட்டது.

இதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் படி ஆஸ்திரேலிய அணி 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் ரன் எடுக்காமலும், கவாஜா 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கவாஜாவும், ஸ்மித்தும் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அதன்பின் 104 ரன்கள் எடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார். இதையடுத்து கவாஜாவுடன், டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி 475/4 ரன்களுடன் ஆடி வருகிறது. கவாஜா 195* ரன்களுடனும், மாட் ரென்ஷா 5 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.

இப்போட்டியில் ஸ்மித் சதம் விளாசியதன் மூலம் ஒரு சாதனையை படைத்துள்ளார். இது டெஸ்ட் போட்டியில் ஸ்மித்துக்கு 30 ஆவது சதமாகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 சதங்கள் அடித்து டான் பிராட்மேனை முந்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித். மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 41 டெஸ்ட் சதங்களும், ஸ்டீவ் வாக் 32 டெஸ்ட் சதங்களும் அடித்துள்ளனர். விரைவில் ஸ்டீவ் வாக்கையும் ஸ்மித் முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்தார் ஸ்மித் (8,647 ரன்கள் ). மைக்கேல் கிளார்க்கை பின்னுக்கு தள்ளி 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.