கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்பளிமேடு பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சித்திரப்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் நீ கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவரா? என மாணவியிடம் கேட்டுள்ளார். அதற்கு மாணவி ஆமாம் என்று கூறியுள்ளார். உடனே அந்த மாணவர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் பேருந்து செம்மங்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது திடீரென 6 பேர் பேருந்தில் ஏறி மாணவருடன் இணைந்து மாணவியை தாக்கியுள்ளனர். இதனை அதே பேருந்தில் பயணம் செய்த 2 மாணவர்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது நீங்களும் கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவர்களா என கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. இதுகுறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தனியார் பள்ளி மாணவர் உட்பட 7 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.