கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட இருப்பதாக மத்திய தகவல் இணை மந்திரி ராஜ சந்திரசேகர் மற்றும் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளனர். இதற்காக ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு பெங்களூருவின் புறநகர் பகுதியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூரில் உற்பத்தியை துவங்க இந்த தொழிற்சாலையில் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தில் தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதேபோல் ஆப்பிள் உதிரிபாகங்களை தயாரிக்கவும் தனது மற்றொரு தயாரிப்பான மின்னணு வாக்குகளுக்கான உதிரி பாகங்களையும் இங்கு தயாரிக்க பாக்ஸ்கான் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் குழுவினர் தொழிற்சாலை அமையும் இடத்தை பார்வையிட வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, சர்வதேச நிறுவனங்கள் முதன்மையான தேர்வாக பெங்களூர் நகரம் இருக்கிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணியில் இருக்கிறது என கூறியுள்ளனர். இந்த குழுவினர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் போன்கள் தயாரிக்க அமைக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும். சமீபத்தில் ஓசூரில் ஆப்பிள் தொழிற்சாலை அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.