திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும் குளத்தை காணவில்லை என ஆட்சியரிடம் மனு அளித்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வரை மீன்பாசி ஏலம் விடப்பட்டு அதற்கான தொகையும் அரசுக்கு கிடைத்து உள்ளது. எனினும் நடப்பு ஆண்டு குளம் இருந்த இடமே தெரியவில்லை என புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.  இதுபற்றி விவசாயி இரோசியல் கூறியதாவது, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கும் மானாவாரி பயிர்கள் விளைவிப்பதற்கும் இந்த குளம் உபயோகமாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், மீன் பாசி ஏலமும் விடப்பட்டது. எனினும் தற்போது குளம் இருந்த தடமே தெரியவில்லை.

விசாரித்ததில் சூரிய மின்சாரம் தயாரிக்க ஆலை அமைக்கவுள்ள டாடா நிறுவனத்திற்கு இந்த இடமும் சேர்த்து வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலரிடம் இது சம்மந்தமாக கேட்டால் அங்கு குளமே இல்லை என அவர் பதிலளிக்கிறார் என கூறினார். நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் குளத்தை காணவில்லை என ஆட்சியரிடம் விவசாயி புகாரளித்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.