பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் ஷிவன்னா மற்றும் கணவி ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை அடுத்து இலங்கைக்கு தேனிலவு சென்ற தம்பதியிடையே கணவியின் திருமணத்திற்கு முந்தைய நட்பு குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கணவி திருமண வாழ்க்கையைத் தொடர விருப்பமில்லை எனக் கூறி ஐந்து நாட்களிலேயே பெங்களூரு திரும்பியுள்ளார். பெரியவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் தனது தந்தை வீட்டிற்குச் சென்ற கணவி அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மகளை இழந்த ஆத்திரத்தில் கணவியின் குடும்பத்தினர் சூரஜ் மற்றும் அவரது உறவினர்கள் மீது வரதட்சணை கொடுமைப் புகார் அளித்ததுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதனால் உயிருக்கு அஞ்சி பெங்களூருவை விட்டு வெளியேறிய சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தங்கும் விடுதியில் தஞ்சம் புகுந்தனர். அங்கு கடும் மன உளைச்சலில் இருந்த சூரஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தன் மகன் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஜெயந்தியும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நாக்பூர் மற்றும் பெங்களூரு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
