ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவருமான அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக சிறைத்துறை கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

பிபிசி அறிக்கையின்படி, நவல்னி ஆர்க்டிக் வட்டத்திற்குள் சிறையில் இறந்தார். இன்று வெள்ளிக்கிழமை நடைப்பயணத்திற்குப் பிறகு அவர் “உடல்நிலை சரியில்லாமல்” இருந்ததாக யமலோ-நேனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைத்துறை தெரிவித்துள்ளது. நவல்னி “கிட்டத்தட்ட உடனடியாக சுயநினைவை இழந்தார்” என்று சிறைத்துறை ஒரு அறிக்கையில் கூறியது. அவசர மருத்துவக் குழு ஒன்று உடனடியாக வரவழைக்கப்பட்டு அவரை உயிர்ப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் அது கூறியது.

இருப்பினும், நவல்னியின் செய்தித் தொடர்பாளர், கிரா யர்மிஷ் கூறுகையில், “இது குறித்து எங்களிடம் இன்னும் எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. அலெக்ஸியின் வழக்கறிஞர் இப்போது கார்ப்பிற்கு பறக்கிறார். எங்களிடம் ஏதேனும் தகவல் கிடைத்தால், நாங்கள்  புகாரளிப்போம்” என்றார்.

அலெக்ஸி நவல்னி யார்?

இதுவரை ரஷ்யாவின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவரான நவல்னி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக  ஜனாதிபதி விளாடிமிர் புடினைக் குறைகூறி, பரந்த அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முக்கியத்துவம் பெற்றார். அவருக்கு வயது 47. புடினின் விமர்சகராகப் பார்க்கப்பட்ட நவல்னி, தீவிரவாத குற்றச்சாட்டில் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். அவர் ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார், இது கடினமான சிறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 1,900 கிலோமீட்டர் (1,200 மைல்) தொலைவில் உள்ள யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள கார்ப் நகரில் உள்ள  IK-3 சிறைக் காலனிக்கு மாற்றப்பட்டார். “துருவ ஓநாய்” காலனி என்று அழைக்கப்படும் இந்த சிறை காலனி ரஷ்யாவின் கடினமான சிறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கைதிகள் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நவல்னியின் மரணம் குறித்து புடினிடம் கூறப்பட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கான காரணம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை, இருப்பினும் சிறைத்துறை அனைத்து சோதனைகளையும் சாத்தியமாக்குகிறது. அவரது மரணம் குறித்து விளாடிமிர் புடினுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.