இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.

இது குறித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதன்படி நீங்கள் வெளிநாட்டுக்கு அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது,ஏனெனில் இதில் சட்ட விரோதமான போதைப்பொருட்கள் உள்ளது என்று கூறி காவல்துறையிலிருந்து தொடர்பு கொள்வது போல பேசுவார்கள். அதனைக் கேட்டு பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

இந்த குற்றத்திலிருந்து விடுபட நாங்களே வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருகிறோம் அதற்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும் அதனை உடனே நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.இன்னும் சில நேரங்களில் 5 லட்சம் வேண்டும் என்று கூறி எளிதாக பணத்தை பறித்து விடுகிறார்கள். கடந்த சில நாட்களாகவே இது போன்ற கிட்டத்தட்ட 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தேவையற்ற அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.