இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் புதிய அதிபரான ரணில் விக்கிரமசிங்கே “தான் பதவியேற்ற உடன் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன்” என உறுதி அளித்திருந்தார். ஆனால் இந்த சட்ட திருத்தம் அமல்படுத்துவதை எதிர்த்து புத்த துறவிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது புத்த துறவிகள் சட்ட திருத்தத்தின் நகலை தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும் 13 வது சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தக்கூடாது எனவும் அவர்கள் முழக்கமிட்டுள்ளனர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் புத்த துறவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.