பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் ஆதரவாளருடன் ஆப்கானிஸ்தான் ரசிகர் மோதியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது..

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்ற கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் இரு ஆதரவாளர்களுக்கு இடையில் இது நடைபெற்றுள்ளதாக வைரலான வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியைக் காண வந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அணிக் கொடிகள் மற்றும் தொப்பிகளை அணிந்திருந்ததாக வைரலான வீடியோ பதிவாகியுள்ளது. அதே சமயம், ஆப்கானிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் அந்த இலங்கை ரசிகருக்கு கையில் நாட்டின் கொடியை ஏந்தியபடி ஏதோ சொல்வதும் தெரிகிறது. இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தாலும், அதன்பிறகு விஷயம் சமாதானம் ஆனது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பார்வையாளர்களிடையே மோதல் ஏற்பட்டது இது முதல் முறை அல்ல. கடந்த ஆசியக் கோப்பைப் போட்டியிலும் மைதானத்தில் இரு அணி ஆதரவாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி :

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசமும், முகமது ரிஸ்வானும் சிறப்பாக அரைசதம் விளாசினர்..

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் பேட்டர்கள் முற்றிலும் தடுமாறினர். 3வது ஒருநாள் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறினர். சொற்ப ரன்களில் அவுட் ஆன போதிலும், மறுபுறம் முஜீப் உர் ரஹ்மான்  அணியை மீட்டெடுக்க முயற்சித்தார், ஆனால் அவரால் மற்ற பேட்ஸ்மேன்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்காக முஜீப் 26 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் அதிவேக அரைசதம் இதுவாகும். முஜீப் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில், அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களையும் அடித்தார். இதன் மூலம் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு சுருண்டது.