திருச்சிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தினமும் இரவு 9.20 மணிக்கு வரும். அந்த விமானம் 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு 10.20 மணிக்கு திருச்சியை வந்தடைந்தது. அந்த விமானத்தை தரை இயக்குவதற்காக விமானிகள் சக்கரங்களை வெளியேவர செய்யும் பொத்தானை இயக்கியுள்ளனர். அப்போதுதான் பின் பக்க இடதுபுற டயரில் காற்று இல்லாமல் பஞ்சராகி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமானம் தரையிறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு வண்டி உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனையடுத்து தைரியமாக விமானத்தை தரையிறக்க விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த நேரம் விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானம் ஓடு பாதையை தொட்டவுடன் தரையில் விமானத்தை ஓட விடாமல் மெதுவாக நிறுத்தினர். இதனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த 180 பயணிகள் உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.