ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு அரசியல் ரீதியாக வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளோம். அதிமுகவே 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை நிரூபித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.