மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் செயல்பட்டு வரும் அழகு பராமரிப்பு நிலையம் ஒன்றில், மசாஜ் செய்து கொள்ளச் சென்ற பெண்ணின் அறைக்குள் அவரது அனுமதியின்றி ஆண் ஊழியர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வில், ஹுவாங் என்ற வாடிக்கையாளர் மசாஜ் பெறுவதற்காக ஆடைகளைத் தளர்த்தி தயாராக இருந்தபோது, திடீரென அங்கு வந்த ஆண் ஊழியரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தான் ஆடையில்லாமல் இருக்கும்போது ஒரு ஆண் சிகிச்சை அளிப்பதை ஏற்க முடியாது என அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த நிலையத்தின் பெண் மேலாளர் அவரை அறிவற்றவர் என்று கேலி செய்துள்ளார். மருத்துவமனைகள் மற்றும் காலணி மசாஜ் நிலையங்களில் ஆண்கள் பணியாற்றுவது சகஜம் என்று கூறிய மேலாளர், அந்த ஆண் ஊழியர் இளைஞர் மற்றும் அழகானவர் என்றும், ஹுவாங் அவரது தாயின் வயதில் இருப்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
மேலாளரின் இந்தப் பேச்சால் மனவேதனையடைந்த ஹுவாங், அந்தச் சேவையைத் தொடர மறுத்ததுடன் காவல்துறைக்குச் செல்லப் போவதாகவும் எச்சரித்தார். அதன் பின்னரே மேலாளர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதுடன் பெண் ஊழியரை அனுப்பச் சம்மதித்தார். இருப்பினும், மசாஜ் நிலையங்களில் எதிர்பாலின ஊழியர்கள் பணியாற்றுவது வழக்கம் என்றும், ஹுவாங் முன்கூட்டியே பெண் ஊழியர் தான் வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்றும் அந்த மேலாளர் நியாயப்படுத்தியுள்ளார்.
வாடிக்கையாளரின் தனியுரிமையை மதிக்காமல் அடாவடியாகப் பேசிய இந்தச் சம்பவம் சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், மசாஜ் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் நடத்தை குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
