
பாம்பை பார்த்தாலே நாம் 10 அடி தள்ளி தான் நிற்போம். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செல்லப்பிராணி போல பாம்பை வளர்ப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் ஷெட்பால் கிராமத்தில் ஒரு வினோதமான பழக்கம் இருக்கிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாம்புகளை கண்டு பயப்படுவதே கிடையாது. மாறாக தங்களது குடும்பத்தில் செல்லப்பிராணியாக பாம்புகளை வளர்க்கின்றனர். புனேவில் 200 கிலோமீட்டர் தொலைவில் அந்த கிராமம் அமைந்துள்ளது. அங்கு 2600 மக்கள் வசிக்கின்றனர்.
உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் நாகப்பாம்பு கூட அந்த கிராமத்தில் இருக்கிறது. பாம்பை பார்த்து யாரும் பயப்படுவது கிடையாது. அதோடு சேர்ந்து தான் நடந்து செல்கிறார்கள். பல தலைமுறைகளாக அந்த ஊர் மக்கள் பாம்பை வளர்த்து வருகின்றனர். சிவனின் வெளிப்பாடாக கருதுவதால் பாம்புகளை கண்ணியத்துடன் நடத்துகின்றனர். தனி வழிபாடுகளும், சடங்குகளும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் கூட பாம்பை பார்த்து பயப்பட மாட்டார்கள். தங்களது வீடுகளில் பாம்புகளுக்கென ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். இதுவரை அதிக எண்ணிக்கையிலான பாம்புகள் அங்கு இருந்தபோதும் ஒருவர் கூட பாம்பு கடித்து இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.