சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சர்வதேசமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 470 பயணிகள் பயணித்த விமானத்தில், ஒரு விமானப் பணிப்பெண், வணிக வகுப்பு கழிப்பறையில் நிர்வாணமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் விமானத்தில் பணி செய்யாத நிலையில் காணப்பட்டதால் தேடல் நடத்தப்பட்டு, சம்பவம் வெளியாகியுள்ளது.

அந்த பெண் தனது பணி நேரத்தில் உணவு மற்றும் பானங்களை வழங்காததை தொடர்ந்து, சக ஊழியர்கள் தேடியபோது, அவர் விமானத்தின் நடுப்பகுதியில் உள்ள கழிப்பறையில் ஆடைகள் இல்லாமல் மேலும் கீழுமாக நடனமாடியதை கண்டுள்ளனர். உடனடியாக நிலைமையை கட்டுப்படுத்திய குழுவினர், அவருக்கு முதல்தர பயணிகளுக்கான பைஜாமா உடையை வழங்கி, தனியொரு இடத்தில் அவரை இடமாற்றினர். சம்பவத்திற்கு முன் அவர் போதைப்பொருள் எடுத்திருந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது “ஆபத்தான” நடவடிக்கையாக இருந்தது எனவும் விமான ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமையகம் உள் விசாரணை நடத்தி வருகிறது. அந்த பணிப்பெண் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விமானம் லண்டன் ஹீத்ரோவுக்கு சென்று இறங்கியதும், அந்த பணிப்பெண் சிகிச்சைக்காக சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.