பெங்களூரு நகரின் பரபரப்பான பகுதியில், ஒரு மனிதர் நடு ரோட்டில் படுக்கையை விரித்து உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வினோத நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அதில், அந்த மனிதர் கால்களை மடக்கி, ஃபோம் மெத்தையில் உறங்குவது தெளிவாகத் தெரிகிறது. இதனால், அந்த வழியாக வந்த பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடைபட்டு, பயணிகள் திணறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, பொதுமக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் சாலை விதிகளை மீறிய செயலாகவே பார்க்கப்படுகிறது. நடு ரோட்டில் படுத்து உறங்கியதன் மூலம், அந்த மனிதர் தனது உயிருக்கு மட்டுமல்ல, மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து @karnatakaportf என்ற X கணக்கில் பதிவிடப்பட்ட வீடியோவில், “இது மிகவும் பொறுப்பற்ற செயல். இதனால் விபத்து ஏற்பட்டால், யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு காவல் துறையும், போக்குவரத்து காவல் துறையும் இதற்கு பதிலளித்து, சம்பவ இடத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், இந்த பதிலை “வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து இடத்தைக் கண்டுபிடிப்பது உங்கள் வேலை” எனக் கூறி, நெட்டிசன்கள் காவல் துறையை விமர்சித்து வருகின்றனர். இந்த மனிதர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.