
சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர் சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும் படி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.
இதன் பின் காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரித்த போது, விரும்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் வசித்து வரும் பூபாலன் (21) என்பதும், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இவர் இரவு நேரங்களில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் பூபாலனை கைது செய்து அவரிடம் இருந்து 4 கிராம் போதை பொருள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விலை உயர்ந்த செல்போன் பயன்படுத்தினால் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாது என போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் உல்லாசமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் பூபாலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.