சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம் தம்பிதுரை எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முக்கியக் கூட்டத்தில் அதிமுகவின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தற்போதைய தேர்தல் களம் அதிமுகவுக்கு மிகவும் சாதகமாக உள்ளதாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி நீடித்தால் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் ஆளுங்கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் இந்த முறை அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
திமுகவில் அண்மையில் இணைந்த ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாகச் சாடிய செல்லூர் ராஜு அவரைப் போன்ற ஒரு மோசமான மனிதரைத் தாங்கள் பார்த்ததே இல்லை என்று மக்கள் பேசுவதாகக் குறிப்பிட்டார். ஒரு சாதாரண டீக்கடைக்காரரை மூன்று முறை முதல்வராகவும் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் ஆக்கியது அதிமுக தான் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர் முன்பு ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்தவர் இப்போது புகழ்ந்து பேசுவது அவரது சந்தர்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது என்றார். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் மீது மரியாதை இருந்ததாகவும் ஆனால் தற்போது அவரது செயல்களால் அவர் மக்கள் மத்தியில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருப்பதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
