கர்நாடக மாநிலத்தின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் ஒரு விடுதி பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் கழிப்பறையில் ஆண் குழந்தையை கடந்த புதன்கிழமை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சுயமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் சஷிதர் கோசும்பே கூறுகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஹர்ஷல் போயர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சிறுமியும் குழந்தையும் நிலைமை குறித்த தகவல்களை பெற்றனர். பள்ளி வார்டன் உள்ளிட்ட ஊழியர்களின் அலட்சியமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால்,நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப்ருத்விக் ஷங்கர் கூறுகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், வார்டன், நர்ஸ் மற்றும் சிறுமியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பாரதீய ந்யாய சனஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.