திருமணமான ஒருவருடன் லிவ்-இன் உறவில் இருந்த பெண், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்தது குறித்து ஏற்பட்ட சண்டையில், கத்தியால் குத்தி அவரை கொன்ற சம்பவம் குருகிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த ஹரிஷ் என்ற அந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

42 வயதான ஹரிஷ், குருகிராமம் பாலியாவாஸ் பகுதியைச் சேர்ந்தவர். டெல்லி அசோக் விஹாரைச் சேர்ந்த 27 வயதான யஷ்மீத் கௌர் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக DLF பாஸ்–3 பகுதியில் லிவ்-இன் உறவாக வாழ்ந்து வந்துள்ளார். ஹரிஷுக்கு மனைவியும், பிள்ளைகளும் இருப்பதால், அவர் குடும்பத்தை சந்திக்கச் சென்றுள்ளார். இதன் காரணமாக யஷ்மீத் கௌர் அவரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற சண்டைகள் தொடர்ந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோசமாகி, யஷ்மீத் கௌர் ஹரிஷை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மார்பில் ஏற்பட்ட தீவிர காயத்தால் உயிரிழந்தார்.

சம்பவத்திற்கு முன் ஹரிஷ், தனது மைத்துனரிடம் இருந்து ரூ.7 லட்சம் வாங்கி, விஜய் என்ற நபர் வந்த காரில் கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 10 மணிக்கு ஹரிஷ் பாரத்திடம் உணவு வாங்க வேண்டும் என்று  சொல்லி அழைத்துள்ளார். அதேபோல்,மறுநாள் காலை 7 மணிக்கு யஷ்மீத் கௌர் அவருக்கு தொலைபேசியில் ஹரிஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து யஷ்மீத் கௌர் கைது செய்யப்பட்டு, குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹரிஷ் ரூ.7 லட்சம் எதற்காக எடுத்தார் என்பதையும், விஜயின் தொடர்பையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.