சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பையும், அனல் பறக்கும் விவாதங்களையும் சந்தித்து வருகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இடையே நடைபெற்ற நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முந்தைய ஆட்சியின் மீதும், நடப்பு விவகாரங்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், நீட் தேர்வு விவகாரம் மற்றும் போக்சோ வழக்குகள் குறித்து விவாதம் சூடுபிடித்தது.

 

இந்த விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அரசு தரப்புப் பதில்கள் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். “பொறுப்புள்ளவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள், முதல்வர் இப்போதே பதிலளிக்கலாம்” என்று அவர் சவாலும் விடுத்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமையன்று விரிவான பதில் அளிக்கிறேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் யார் என்ன பேசினார்கள் என்ற விவரம் எனக்கு வந்துவிடும். அதேசமயம், நான் பேசும்போது திமுக உறுப்பினர்கள் யாரும் அவையை விட்டு ஓடிவிடக்கூடாது” என்று  விமர்சித்தார்.

 

உடனே பதிலடி கொடுத்த உதயநிதி, “கடைசியாக யார் ஓடிப்போனார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்” என்று கூறி சபையில் சலசலப்பை ஏற்படுத்தினார். மேலும், அவைக் குறிப்பில் முதலமைச்சர் குறிப்பிட்ட ‘ஓடிவிடுதல்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.

 

தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது. திங்கட்கிழமை நடைபெறவுள்ள முதலமைச்சரின் பதிலுரை எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் இப்போதே உச்சத்தை அடைந்துள்ளது.