மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் என்பவரின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அவரது பெரியப்பா ஹர்சரண் ஜாதவ் வைத்திருந்த 12 போர் துப்பாக்கி அங்கு இருந்துள்ளது. துப்பாக்கியை பார்த்த ரோஹித், உற்சாகத்தில் அதனை வாங்கிக் கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாடிக்குச் சென்ற ரோஹித், துப்பாக்கியால் வானத்தை நோக்கி அடுத்தடுத்து சுட்டுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஒருவர், இந்த சம்பவத்தை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வேகமாகப் பரவியுள்ளது. இந்தக் காணொலி காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்ற நிலையில், அதில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில், பிறந்தநாள் கொண்டாடிய ரோஹித்தே துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மோகனா காவல் நிலைய போலீஸார் ரோஹித் மற்றும் துப்பாக்கியின் உரிமையாளரான அவரது பெரியப்பா ஹர்சரண் ஜாதவ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், துப்பாக்கியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், அதை மற்றொருவர் பயன்படுத்தி பொதுமக்கள் இருக்கும் பகுதியில் வானத்தை நோக்கி சுடுவது சட்டப்படி அனுமதிக்கப்படாது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவர் மீதும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இதுபோன்ற கொண்டாட்டங்களில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். வானத்தை நோக்கி சுடப்படும் தோட்டா மீண்டும் கீழே விழும்போது யாரை வேண்டுமானாலும் தாக்கும் அபாயம் இருப்பதால், இதுபோன்ற செயல்களை வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கியை உரிமையாளரே மற்றொருவரிடம் கொடுத்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அந்தத் துப்பாக்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
