துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், போட்டி முடிந்ததும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.

வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ரசிகர்களைச் சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்ட ஃபாத்திமா சனாவுடன், அவர்கள் கலகலப்பாகப் பேசினர். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம், “நீங்க என்னதான் சாப்பிடுறீங்க?” என்று குறும்புடன் கேட்டு, அவரது பவர்புல் சிக்சர்களைப் பாராட்டி மகிழ்ந்தார். இதற்கிடையே, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பரம எதிரியான இந்தியா – பாகிஸ்தான் மோதலைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பற்றிக் கொண்டது. ரசிகர்கள் சனாவிடம், “இந்தியாவுடன் நடக்கும் போட்டியில் நீங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்”  என்று தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.

 

அதற்கு ஃபாத்திமா சனா புன்னகையுடன் இறைவனின் நாட்டம் இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று எளிமையாகப் பதிலளித்து தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். தாய்லாந்துக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்குத் தேவையான உத்வேகத்தைத் தந்திருந்தாலும், செப்டம்பர் 5-ஆம் தேதி பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ள அவர்கள் இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டியது அவசியமாகிறது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக இரு அணிகளும் மோதிய 17 போட்டிகளில், பாகிஸ்தான் வெறும் 3 முறை மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகத்தில் அதிகரித்துள்ளது.