தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று வழக்கம் போல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அதிரடியான மற்றும் பிரம்மாண்டமான புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த மெகா திட்டங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.4,800 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைக்கப்படும்.
ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ரூ.500 கோடியில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள் உட்பட 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடியும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை மேலும் அதிகரிக்க ரூ.410 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடியும், நாகர்கோவில், குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு ரூ.960 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படவுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடியில் (9 மெகாவாட்) மற்றும் சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் (10 மெகாவாட்) என மொத்தம் ரூ.547 கோடி மதிப்பீட்டில் ‘திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்’ அதிரடியாகச் செயல்படுத்தப்படவுள்ளன.
சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய சாலைகள் அமைக்கவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் ரூ.1,850 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.275 கோடி ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்த்த ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை இனி பொதுமக்கள் எந்தவித அலைச்சலுமின்றி மிகவும் எளிதாக ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய வசதி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
