டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, வகுப்பிற்குப் புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த வகுப்பாசிரியர், அந்தச் சிறுமியை வகுப்பிற்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் கைகளைத் தூக்கியபடி நிற்க வைத்து மனிதாபிமானமற்ற தண்டனையை வழங்கியுள்ளார். நீண்ட நேரம் கடுமையான வெயிலில் நின்றதால் உடல்நிலை முற்றிலும் தளர்ந்துபோன அந்தச் சிறுமி, திடீரெனத் தலைசுற்றி மயங்கி வகுப்பறை வளாகத்திலேயே கீழே விழுந்தார்.

சிறுமி மயங்கி விழுந்ததைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அவரது தாயார் அஞ்சலிக்குத் தகவல் தெரிவித்தனர். பதறிப்போய் பள்ளிக்கு ஓடிவந்த தாய், வெயிலில் வாடி வதங்கி ஆபத்தான நிலையில் கிடந்த தனது மகளைக் கண்டு கதறி அழுதார். உடனடியாகச் சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அந்தப் பச்சிளம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்கள் செல்ல மகளின் திடீர் மரணத்திற்கு முழுக்காரணமான அந்த ஆசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் பள்ளியின் முன்பு திரண்டு தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜக எம்.எல்.ஏ, இதுகுறித்து உரிய நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அலட்சியம் இருப்பது உறுதியானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு ஏற்கனவே வலிப்பு நோய் பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பள்ளி மற்றும் மருத்துவப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான உண்மையான மற்றும் துல்லியமான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியரின் கண்மூடித்தனமான தண்டனையால் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.