மதுரையில் நடைபெற்ற மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அரசியல் நிலவரங்கள், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் தனது தனித்துவமான கொள்கைகள் குறித்து அவர் பல்வேறு அதிரடியான கருத்துகளைப் பதிவு செய்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், “கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதங்கள் இப்போதுதான் வந்தன; அப்படியானால் எப்போது வந்தது பௌத்தம்? நாம் யார்? உலகின் முதல் மொழி தமிழ்தான், முதல் மாந்தன் தமிழன்தான்” என்று தனது வரலாற்று வாதத்தை முன்வைத்தார். மேலும், தங்களின் அரசியல் போராட்டம் குறித்துப் பேசுகையில், “நாங்கள் நீண்ட நாட்களாகப் பல்வேறு பிரச்சினைகளுக்காகக் களத்தில் போராடி வருகிறோம். சர்க்கார் படத்தின் போஸ்டரைக் கிழித்த சம்பவம்தான் தற்போது சர்வதேசப் பிரச்சினையாகிவிட்டதாக ஒரு அமைச்சர் சட்டமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கின்றன, அதெல்லாம் பிரச்சினையில்லையாம், சர்க்கார் போஸ்டர் மட்டும்தான் பிரச்சினையாம்!” என்று கிண்டலாகக் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழலைக் விமர்சித்த சீமான், “எங்கள் மக்கள் இன்னும் கொஞ்சம் மயக்கத்திலும் பெருங்காதலிலும் இருக்கிறார்கள். இந்த 5 ஆண்டு ஆட்சி என்பது முறையான ஆட்சியக இருக்கப் போவதில்லை; வெறும் காட்சியளவில்தான் நடக்கும். இங்கே ரூல் நடக்கவில்லை, ஒன்லி ரீல் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.
அமெரிக்கப் பயணம் குறித்து நினைவுகூர்ந்த அவர், “அமெரிக்காவில் என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், ‘உன்னை எப்படி உன் நாட்டில் இன்னும் உயிரோடு விட்டு வைத்துள்ளனர்?’ என்று வியந்து கேட்டனர். அப்போது என்னை அவர்கள் ‘பாஸ்’ என்றுதான் அழைத்தார்கள். நம் கட்சியின் கொள்கை என்னவென்று கேட்டார்கள்; நான் சொன்னால் என் கட்சியில் சேர்வீர்களா என்று கேட்டேன், உடனே அவர்கள் சிரித்துவிட்டனர்” என்று சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்துப் பேசிய சீமான், “நான் எப்போதோ எச்சரித்தேன்; நேபாளத்தில் வெள்ளம் வந்து மக்கள் இறந்த பிறகு, நான் அன்றே பேசிய பழைய காணொளிகளை இப்போது எடிட் செய்து சமூக வலைதளங்களில் போட்டு வருகிறார்கள். நான் போதிக்கும்போது யாருக்கும் புரிவதில்லை, பாதிப்பு வரும்போதுதான் புரிகிறது. அமெரிக்க விஞ்ஞானி சொல்வதற்கு முன்பே, இந்த ‘அரணையூர் விஞ்ஞானி’ ஆகிய நான் அதைப் பற்றி முன்பே சொன்னேன்; ஆனால், என் பேச்சைக் யாரும் கேட்கவில்லை. நம்மாழ்வார் எழுதியதைப் படித்துவிட்டுத்தான் நான் தெருத்தெருவாகக் கத்தினேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.
