அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் அரிய வகை வெள்ளை பால்கன் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ‘கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்’ என்ற இந்த பால்கன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.90 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 55 முன்னணி பால்கன் பண்ணைகள் பங்கேற்றுள்ளன. இதில் பல்வேறு அரிய பால்கன் பறவைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் அதிக விலைக்கு விற்பனையான பால்கனாக இந்த வெள்ளை பறவை சாதனை படைத்துள்ளது.

இந்த பால்கனின் முக்கிய சிறப்பு அதன் தூய்மையான வெள்ளை நிறம். சுமார் 1 கிலோ எடை கொண்ட இந்தப் பறவை, 16.5 அங்குல நீளம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அரிய நிறம், கம்பீரமான தோற்றம் மற்றும் உடல் அமைப்பு ஆகியவை ஏலத்தில் பங்கேற்ற பால்கன் ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபுதாபி மற்றும் வளைகுடா நாடுகளில் பால்கன் வளர்ப்பு மற்றும் வேட்டை பாரம்பரியத்திற்கு முக்கிய இடம் உள்ளது. இதன் காரணமாக, அரிய வகை மற்றும் சிறப்பான மரபுவழி கொண்ட பால்கன்களுக்கு ஏலங்களில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. தற்போது விற்பனையான இந்த வெள்ளை பால்கனின் 1.5 மில்லியன் திர்ஹாம் ஏலத்தொகை, அந்தக் கண்காட்சியின் நடப்பு பதிப்பில் இதுவரை பதிவான அதிகபட்ச விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது.