தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் சுமார் 56,000 ரசிகர்கள் திரண்டிருந்த மைதானத்துக்கு மேலே இரண்டு பயணிகள் விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டிக்கு முன்பாக இந்த விமான சாகசம் நடைபெற்றது. விமானங்கள் மைதானத்தின் மேற்கூரைக்கு மிக அருகில் பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

உள்ளூர் விமான நிறுவனமான ஏர்லிங்க் இயக்கிய இரண்டு எம்ப்ரேயர் ரக விமானங்கள் இந்தச் சாகசத்தில் ஈடுபட்டன. விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் சேவையின் மதிப்பீட்டின்படி, முன்னால் சென்ற விமானம் மைதானத்தின் மேற்கூரையிலிருந்து சுமார் 41 முதல் 46 அடி உயரத்தில் மட்டுமே பறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது விமானம் அதற்குப் பின்னால் சென்றபோது, மைதானத்தின் மேற்கூரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிறப் புகை போன்ற காட்சியைக் கடந்து சென்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by CNN (@cnn)

இந்த காட்சியை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றாலும், விமானங்கள் இவ்வளவு குறைந்த உயரத்தில் பறந்தது குறித்து விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இத்தகைய குறைந்த உயரத்தில் பறக்கும்போது திடீரென பறவை மோதல் அல்லது காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் விமானத்தை பாதுகாப்பாகக் கட்டுப்படுத்துவதற்கு போதிய நேரமும் இடமும் இருக்காது என அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்தச் சாகசம் குறித்து சமூக வலைதளங்களிலும் விவாதம் எழுந்துள்ளது.

இதனிடையே, விமான நிறுவனம் இந்த விமானச் சாகசம் உரிய திட்டமிடல் மற்றும் பலமுறை ஒத்திகைக்குப் பிறகே நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இரண்டு விமானங்களிலும் பயணிகள் யாரும் இல்லை என்றும், ஒவ்வொரு விமானத்திலும் மூத்த விமானிகள் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியுடன், வேகம் மற்றும் உயரம் தொடர்பான பாதுகாப்பு விதிகளுக்குள் இந்தச் சாகசம் நடத்தப்பட்டதாகவும் ஏர்லிங்க் விளக்கம் அளித்துள்ளது.