அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு உரிமையை ரத்து செய்யத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

எச்-1பி விசா பணியாளர்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதே இந்த எச்-4 விசா ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள புதிய முன்மொழிவு, இந்த விசா பிரிவில் உள்ளவர்களின் வேலை செய்யும் தகுதியை நீக்கப் பரிந்துரை செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களில் சுமார் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை இந்தியர்களைப் படுமோசமாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, வேலை உரிமை பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பெண்கள் என்பதால், ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்களின் வேலை வாய்ப்பும் பொருளாதாரச் சுதந்திரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டம் இப்போதே உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடாது. தற்போதைக்கு இது ஒரு ஆலோசனையாக மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. இது சட்டமாக மாறப் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, பல்வேறு கட்ட நடைமுறைகளுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டும் இதே போன்ற ஒரு முயற்சியைத் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட நிலையில், சட்டப் போராட்டங்களுக்குப் பின் 2021-ல் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அதே அஸ்திரத்தைக் கையில் எடுத்திருப்பது அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பங்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.