மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் பதிவாகியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள், கண்ணில் படும் விலங்குகளை உடனடியாக அடித்துக் கொன்று தின்பதுதான் வழக்கம். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக ஒரு சிறுத்தை நாய் குட்டியை கவ்விப் பிடித்தும், அதற்கு எந்தவிதமான தீங்கும் செய்யாமல் விட்டுச் சென்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பால்கர் மாவட்டம் வண்கான் மற்றும் பாவ்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகளின் நடமாட்டம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் பல வளர்ப்புப் பிராணிகளைச் சிறுத்தை அடித்துக் கொன்றதால் பொதுமக்களும் கிராம மக்களும் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பாவ்டா பகுதியில் உள்ள புகழ்பெற்ற கணபதி கோயில் அருகே வழக்கம் போல் சில நாய்கள் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
Leopard on the hunt… but spares a puppy!
Palghar: The leopard, which had ventured into the area in search of prey, caught a tiny puppy in its grasp but, instead of attacking it, released the animal unharmed. pic.twitter.com/BLpMkdoM2r
— Suhas Birhade ↗️ (@Suhas_News) August 31, 2026
அப்போது அங்கு திடீரென நுழைந்த சிறுத்தை ஒன்று அந்த நாய்களைத் துரத்தியுள்ளது. சிறுத்தையைக் கண்டதும் பயந்துபோன பெரிய நாய்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டன. ஆனால், ஓட முடியாமல் பின்தங்கிய இரண்டு சிறிய குட்டிகளில் ஒன்றை மட்டும் அந்தச் சிறுத்தை லாகவமாகக் கவ்விப் பிடித்தது.
தன் கைவசம் இருந்த இரையைச் சிறுத்தை உடனடியாகக் கொன்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அந்த நாய் குட்டிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படுத்தாமல் பத்திரமாகத் கீழே இறக்கிவிட்டுச் சென்றது. கோயிலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. பயங்கரமான ஒரு காட்டு விலங்கு தன் இரையைக் கண்முன்னே வைத்துக் கொண்டு காட்டிய இந்த ‘தயாள குணம்’ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், சிறுத்தையின் இந்த விசித்திரச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அப்பகுதி மக்கள் மத்தியில் உள்ள அச்சம் இன்னும் குறைந்தபாடில்லை. சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அந்தச் சிறுத்தைப் பாதுகாப்பாகப் பிடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
