அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் இரண்டு கத்திகளுடன் சாலையில் உலாவி பொதுமக்களை அச்சுறுத்தித் தாக்குதல் நடத்திய பெண் ஒருவர், காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை அன்று, கைகளில் இரண்டு கத்திகளுடன் டைம்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு வந்த ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை திடீரெனத் தாக்கத் தொடங்கினார். இந்தச் சம்பவம் குறித்த பரபரப்பான வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்தக் காணொளியில், பெண் போலீஸ் அதிகாரி உட்பட 5 முதல் 6 காவலர்கள் அந்தப் பெண்ணை சுற்றி வளைப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதம் ஏந்திய அந்தப் பெண் தொடர்ந்து காவலர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதுடன், திடீரெனக் கத்திகளுடன் ஒரு காவலரை நோக்கிப் பாய்ந்து சென்றார். உடனே சுதாரித்துக்கொண்ட காவலர் தனது துப்பாக்கியால் சுட்டார். மூன்று முறை துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்கும் அந்தத் தருணத்திலேயே அந்தப் பெண் நிலைதடுமாறி சாலையில் சுருண்டு விழுந்தார். இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
This lady was running around stabbing people in time square. She straight up stabbed the person in front of me. Shit could’ve been me pic.twitter.com/lYfye4J1t1
— 𝖠𝖴𝖲𝖳𝖤𝖭꩜ (@austen_tv) August 31, 2026
இந்தச் சம்பவம் குறித்து நியூயார்க் நகரின் மேயர் ஜோஹ்ரன் மம்தானி கூறுகையில், டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் பொதுமக்களைத் தாக்கிய அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் முதலில் ‘டேசர்’ கருவியைப் பயன்படுத்தியதாகவும், நிலைமை கைமீறிச் சென்றதால் சுட நேரிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், “ஒரு பெரிய பேரழிவைத் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய மேயர், இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒருவரும், சுடப்பட்ட அந்தப் பெண்ணும் உயிரிழந்ததாகவும், மற்றொரு நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிலையான நிலையில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.
BREAKING: New York City Mayor Zohran Mamdani says a woman armed with multiple knives stabbed two people in Times Square before responding NYPD officers deployed a Taser and opened fire.
“I want to thank the NYPD officers who stepped in and prevented a horrific attack from… https://t.co/NaiouLiGUA pic.twitter.com/lAP5K1x2CL
— Breaking911 (@Breaking911) September 1, 2026
காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை அதிகாரப்பூர்வமான “காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டு நடவடிக்கை என்று பதிவிட்டு தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பரபரப்பான சுற்றுலாத் தலமான டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் இரத்தக் கரைகளுடன் காணப்பட்ட இந்தச் சம்பவ இடத்தைப் புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பில்லை என்று கருதப்பட்டாலும், அந்தப் பெண் ஏன் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டார் என்பதற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்த பெண்ணின் அடையாளமும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
