அமெரிக்காவின் அவசரகால எரிபொருள் பாதுகாப்புக்கான மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு தற்போது குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 70 கோடி பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட இந்தச் சேமிப்பில் சுமார் 28.97 கோடி பீப்பாய்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவசரகால எரிபொருள் தேவையை எதிர்கொள்ளும் வகையில் கையிருப்பை அதிகரிப்பதில் அமெரிக்க நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக ஊடகப் பதிவில் கருத்து தெரிவித்த டிரம்ப், வெனிசுலாவிலிருந்து கிடைக்கும் எண்ணெயை அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பை நிரப்ப பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதனை வெனிசுலா மக்கள் அமெரிக்காவுக்கு வழங்கும் “பரிசு” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முந்தைய நிர்வாகம் மூலோபாய எண்ணெய் கையிருப்பில் இருந்து அதிக அளவில் எண்ணெயை பயன்படுத்தியதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். எனினும், டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரது ஆட்சிக் காலங்களிலும் இந்த அவசரகால கையிருப்பிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வளம் இருப்பதால், அந்த நாட்டுடனான எண்ணெய் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவின் நீண்டகால எரிபொருள் தேவையை உறுதி செய்வதே திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மிகப்பெரிய எண்ணெய் நிறுவன அமைப்பை உருவாக்குவது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தால், உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் சந்தை ஏற்கெனவே பல்வேறு புவிசார் அரசியல் காரணிகளால் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய எண்ணெய் திட்டம் கவனம் பெற்றுள்ளது. அவசரகால கையிருப்பை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களை சமாளிக்க முடியும் என அமெரிக்க நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் மற்றும் எரிபொருள் சந்தையில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகே தெளிவாகும்.